இலங்கையுடன் தொடர்புடைய மனிதக் கடத்தல் வழக்கில் ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
இலங்கையுடன் தொடர்புடைய மனிதக் கடத்தல் வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், புலனாய்வு முகமையின் விசேட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட தினகரன் அய்யா, காசி விஸ்வநாதன், ரசூல், சதாம் உசேன், அப்துல் முஹீது மற்றும் சோக்ரடீஸ் ஆகியோர், தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கையர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டக் கோவை 343, 344, 370 (3) மற்றும் 120 பி பிரிவுகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச கடத்தலில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டடுள்ளது.
கனடாவில் குடியேற்றுவதாகக் கூறி, இலங்கைப் பிரஜைகளை கவர்ந்திழுத்து இந்தியாவில் பல்வேறு இடங்களில் அவர்களை தங்கவைத்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மங்களூர் தெற்கு காவல் நிலையத்தில் 25 இலங்கையர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அடுத்தடுத்து இடம்பெற்ற சுற்றி வளைப்பில் மேலும் 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.
38 இலங்கையர்கள் 2021 பெப்ரவரி முதல் ஏப்ரல் 20 வரை நான்கு குழுக்களாக இந்தியாவுக்கு கடத்தப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சூழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழகம் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைத்துள்ளதோடு, அவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் எவ்வித தொடர்பினையும் மேற்கொள்ள முடியாதவாறு அடைத்து வைத்திருந்துள்ளனர்.
இதனால் அவர்கள் கனடாவுக்குச் செல்லும் கப்பலில் இருப்பதாகத் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட 38 இலங்கையர்கள் அனைவரும் கனடாவுக்கு அனுப்பப்படுவதாக உறுதியளிக்கப்பட்டு 3.5 முதல் 10 இலட்சம் இலங்கை ரூபாய் வரை செலுத்தியுள்ளதாக தெரிவ வருகிறது.