அறவழிப் போராட்டங்களை வன்முறையால் அடக்கும் பேரினவாத அரசின் நடவடிக்கை
அறவழிப் போராட்டங்களை வன்முறையால் அடக்கும் பேரினவாத அரசின் நடவடிக்கைகளைக் வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கின் பொது அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
தையிட்டியில் தனியார் காணிகளைச் சட்ட விரோதமாக அபகரித்து ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்டு வருகிறது என கூறி குறித்த அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் குறித்த அறிக்கையில்,
தனியார் காணிகள்
“தையிட்டியில் தனியார் காணிகளைச் சட்ட விரோதமாக அபகரித்து ஒரு பௌத்த விகாரை கட்டப்பட்டு வருகிறது. அதனை மேற்கொள்ளுவது சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய காவல்துறையும், நாட்டை இன, மத பேதமின்றிப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புப் படைகளும், அனைத்து மக்களையும் சமனாகக் கருதி ஆட்சி புரிய வேண்டிய அரசும்தான்.
சிறிலங்காவில் இருப்பது ஒரு இனவாட்சியே (Ethnocracy) அன்றி ஜனநாயக ஆட்சி அல்ல என்பதை இந்த விவகாரம் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.
இந்த விவகாரம் எமக்குப் பல்வேறு விடயங்களை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, இந்தச் செயற்பாடு ஒரு சட்டவிரோதச் செயற்பாடாகும்.
தனியாருக்குச் சொந்தமான காணிகளை அரசும், அரசின் அங்கங்களான பாதுகாப்புப் படை, காவல்துறை என்பனவும், முதன்மை மதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பௌத்த மதத்தின் மத பீடங்களும் இணைந்து ஆக்கிரமித்துள்ளன.
தமது சொந்தச் சட்டங்களையே மிதித்துப்புறந்தள்ளி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு சட்டவிரோத நடவடிக்கையாகும். இரண்டாவதாக இந்த விவகாரம் அரசியல் யாப்பிற்கு முரணானதாகும்.
அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள தனது மக்களின் உரிமைகளை மறுதலித்து, அவர்களது சொத்துக்களை எவ்வித முறைமைக்கும் உட்படுத்தாது அரசு ஆக்கிரமிப்பது அரசியல் யாப்பிற்கும் முரணானது.
மூன்றாவதாக இது ஒரு ஜனநாயக மீறலாகும்.அரசிடம் பாரதீனப் படுத்தப் படாத, தனது நாட்டு மக்களின் தனிப்பட்ட சொத்துக்கள் தொடர்பான இறைமையை ஒரு அரசு திட்டமிட்டுத் தனது கைகளில் எடுத்துள்ளது.
மன்னராட்சி நடைமுறை
சொந்த மக்களின் சொத்துக்களையே, எவ்விதமான அரசாட்சி நடைமுறைகளுமற்றுக் கையகப்படுத்துவது மன்னராட்சி நடைமுறைக்கு ஒத்தது.
நவீன ஜனநாயக அரசுகளில் இந்த நடைமுறை இருக்க முடியாது. நான்காவதாக இது மக்களின் அடிப்படை உரிமை மீறலாகும். அரசினதும், அரசின் வன்முறை இயந்திரங்களான பாதுகாப்புப் படைகள், காவல்துறை என்பவற்றாலும் பொதுமக்கள் பாதிக்கப்படும் பொழுது அதனைக் கண்டித்து எதிர்ப்பை வெளிக் காட்டுவது மக்களின் அடிப்படை உரிமையாகும்.
இந்த விவகாரத்தில் தனது மக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை அரசு தன் வன் கரங்களால் நசுக்கியுள்ளது. ஐந்தாவதாக ஒரு நாட்டின் சட்ட திட்டங்களைத் தனது கையில் எடுத்து அதனைப் பிற தேசிய இனங்களை அடக்கும் ஆயுதமாகப் பாவிக்கும் இனவாட்சிச் செயற்பாடுகளுக்கு இந்த விவகாரம் ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும்.
உள்நாட்டுச் சட்ட திட்டங்களும் , பொறிமுறைகளும் எந்த விதத்திலும் நீதியை நிலை நிறுத்தமுடியாதவை எனும் வரலாற்றனுபவத்திற்கான மிகச் சமீபத்திய சான்றாக தையிட்டி விவகாரம் விளங்குகிறது.
முரண்பாடுகளையும் பதட்டத்தையும் ஏற்படுத்தக் கூடும் என்ற காரணத்தைக் காட்டி, ஒரு அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான சில தனிநபர்களின் உரிமையை, நீதிமன்றத்தின் உத்தரவின் படி மறுக்கும் ஏற்பாடுகளைக் காவற்துறை செய்திருந்தது.
எனினும் பௌத்த மதத்தை பின்பற்றும் சாதாரண குடிமக்கள் அந்தப் பிரதேசத்தில் ஒரு சமூகமாக வாழவில்லை என்பதால் தையிட்டி விவகாரத்தில் அவ்வாறான முரண்பாடுகளும் பதட்டமும் பாதிக்கப்பட்ட மக்களின் சாத்வீக எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஏற்படாது என்பது வெள்ளிடைமலை.
ஏனெனில் அப்பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய அரசுப் படைகளே நிறைந்திருக்கிறார்கள்.
முரண்நகையாக , கூறப்பட்ட காரணங்களுக்கு மாறாக, காவல்துறையின் பலப் பிரயோகமும், மிகை வன்முறைப் பிரயோகமும் தான் உடனடிப் பதட்டத்தையும், நீண்ட கால வடுக்களையும், முரண்பாடுகளின் தீவிரத் தன்மையையும் அதிகரித்துள்ளது.
இது சிறீலங்கா அரசுக் கட்டமைப்பு, பெருந்தேசிய இனக் குரோத மயப்பட்டுள்ளதை வெளிப்படையாகப் பறைசாற்றுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |