எச்சரிக்கை: கனடா அனுப்புவதாகக் கூறி ஏமாற்றும் மோசடிக் கும்பல்! குறிவைக்கப்படும் மாவீரர் குடும்பங்கள்!!
கனடா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 300 மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பங்களை கனடா அனுப்பதாகக்கூறி ஒரு மோசடிக் கும்பல் வன்னியில் களமிறங்கியுள்ளது.
கனடா செல்ல விரும்பும் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் அதற்காக 5 இலட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் போதும் என்று கூறப்பட்டும் பணமும் அறவீடு செய்யப்பட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.
நாடுகடந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்த அமைப்பின் பிரதானி உருத்திரக்குமாரின் ஒழுங்கமைப்பில் கனடா அரசாங்கமே மாவீரர் போராளிகளின் குடும்பங்கள் கனடாவில் வசிப்பதற்கான வீசாவை வழங்க முன்வந்துள்ளதாகக் கூறியே சிலர் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரக்குமாரைத் தொடர்புகொண்டு கேட்டபொழுது, 'தமது தரப்பினால் இதுபோன்ற எந்தவிதமான செயற்பாடுகளும் நடைபெறவில்லை என்றும், இது ஒரு அப்பட்டமான ஏமாற்று மோசடி என்பதுடன், மக்கள் இதுபோன்ற விடயங்களில் ஏமாறாமல் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கனடாவில் வசிக்கின்ற சிலரும், இந்தியாவில் தங்கியிருக்கின்ற ஒரு பெண்ணும், இலங்கையில் இருக்கின்ற இருவருமே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.