மனிதப் புதைகுழிகளில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் : ஐ.நா வெளியிட்ட அறிக்கை
செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடுவதற்கான தீர்மானம் குறித்து இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் (UN) அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த தீர்மானம் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதோர் நடவடிக்கை ஆகும் என அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ”செம்மணி சித்துபாத்தி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப்புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடும் தீர்மானம், இலங்கையில் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டதோர் நடவடிக்கையாகும்.
காணாமல் போனோரின் குடும்பங்கள்
பல தசாப்த காலமாக தமது அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அயராது, திடமாக பதில்களைத் தேடிவரும் காணாமல் போனோரின் குடும்பங்களுடன் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் உறுதியாக நிற்கிறது.
உண்மை மற்றும் நீதியைப் பின்தொடர்வதில் அவர்களது தாங்கும் வல்லமை ஒரு தார்மீக வழிகாட்டியாகத் தொடர்கிறது.
இலங்கை அரசாங்கம், குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தமது பணியை வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும், காணாமல் போனோரின் குடும்பங்களுடனான அர்த்தமுள்ள ஆலோசனைகளுடனும் நிறைவேற்றவேண்டும்” என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

