மோடிக்கு கடிதம் எழுதுவதை தமிழக முதலமைச்சர் நிறுத்த வேண்டும்!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் நோக்குடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (12.01.2026) யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் புதுச்சேரி, இராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் வடமராட்சி கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடற்றொழிலாளர்கள்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “நெடுந்தீவு மற்றும் அனலைதீவு கடற்பரப்பிலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்றன.

இவ்வாறு அவர்கள் இலங்கை கடற்பரப்பினை அழித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் பாரத பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
பாரத பிரதமருக்கு கடிதத்தினை எழுதி தொடர்ந்து அரசியல் நாடகத்தினை செய்யாதீர்கள். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் முதலாளி வர்க்கத்தினரிடம் தான் இந்த இழுவைமடித் தொழில்கள் இருக்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் தான் எமது கடல் வளத்தை அழிக்கின்றனர். முதலமைச்சர் நினைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து இழுவைமடித் தொழில்களையும் நிறுத்தலாம்.
முதலமைச்சர்
நீங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினாலேயே எமது மனம் வேதனை அடைகிறது. தன்னுடைய அதிகாரத்தின் கீழ் இருக்கின்ற தன்னுடைய கடற்றொழிலாளர்களை நான்கு வருடங்களாக பதவியில் இருக்கின்ற முதலமைச்சர் கட்டுப்படுத்தாமல் அந்த பிரச்சினையை அரசியலாக்குவது நல்லதல்ல.

அவர்களுடைய கடற்றொழிலாளர்கள் எங்களுடைய எல்லைக்குள் வராமல் ட்டுப்படுத்துவதே நல்ல விடயம்.
இதேவேளை, இலங்கையில் மலையகத்தில் எமது சொந்தங்கள் 200 வருடங்களுக்கு மேலாக பல இன்னல்களை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுடைய நெருக்கடியை தீர்ப்பதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடிக்கு கடிதங்களை எழுதி அரசியல் செய்யாதீர்கள்.
வடக்கு மக்களையும், மலையக மக்களையும் புறந்தள்ளி அரசியலை முன்னே கொண்டு செல்வதை தமிழக முதலமைச்சர் நிறுத்த வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |