ஈரானை குறி வைக்கும் ட்ரம்ப்: ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் பலி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஈரானில் அதிகரித்துள்ள பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் திகதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 15 நாட்களாக நீடித்து வருகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கடமையில் ஈட்டுபட்டுள்ள நிலையில், பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடுமையான நடவடிக்கை
இந்நிலையில், ஈரானில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் 500 பேர் வரை பலியானதாக அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

அவர்களில் 8 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10,600 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.
ஈரானில் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன் அரசாங்க ஆதரவு பேரணிகளில் கலந்துகொள்ளுமாறும் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஈரானின் சட்டமா அதிபர் மொஹமட் மொவாஹிதி அசாத் அரச தொலைக்காட்சியில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், கலகக்காரர்களுக்கு உதவுபவர்கள் அல்லது வன்முறையில் பொருட்களை சூறையாடுபவர்கள் மற்றும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் ஒரேவித தண்டனைதான் கிடைக்கும். அவர்களுக்கு எந்தவித கருணையும் காட்ட கூடாது என அவர் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
இதற்கிடையே ஈரானில் நடைபெறும் போராட்டங்களில் தலையிடவுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்நிலையிலேயே இது தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் எவ்வாறான விடயங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்படுகிறது என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |