யாழில் சிக்குன்குனியா அபாயம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் இம்முறை சிக்குன்குனியா நோயும் பரவ ஆரம்பித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நவம்பர் முதல் பெப்ரவரி வரையான மழை காலத்தில் டெங்கு, இன்புளுவென்சா, எலிக்காய்ச்சல, தைபஸ் போன்ற நான்கு நோய்களை எதிர்நோக்கியிருந்த நிலையில் இம்முறை சிக்குன்குனியாவும் பரவ ஆரம்பித்துள்ளது.
டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்றன நுளம்புகளால் ஏற்படுகின்றது. தைபஸ் உண்ணியால் பரவுகின்ற ஒரு நோய் அது போல இன்புளுவென்சா நாம் தும்மும் போதும் இருமும் போதும் பரவுகின்றது.
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவினுடைய அறிகுறிகளாக அதிகளவான காய்ச்சல், தலை நோ, கண்ணுக்குப்பின் நோ ஏற்படல், உடல் வலி ஏற்படும். இது ஆரம்ப கட்டமாகக் காணப்படும். அதேபோன்று காய்ச்சல் தணியும் போது வாந்தி, வயிற்றுக் குத்து போன்றன ஏற்படும் இது அபாயகரமானதாக காணப்படும்.
சிக்குன்குனியாவினுடைய அறிகுறியாக கடும் காய்ச்சல், மூட்டுக்களில் நோ ஏற்படும். இது காய்ச்சல் விட்ட பின்னரும் ஒரு வாரம் அல்லது பல மாதங்கள் கூட தொடரும்.
சிக்குன்குனியா மற்றும் டெங்கு காய்ச்சலிற்கு என்ற சிகிச்சை முறை இல்லை இருப்பினும் பரிசிட்டமோல், செலேன் ஏற்றுதல், அதிகளவாக நீர் அருந்துதல், ஓய்வெடுத்தல் போன்ற முறைகள் பயன்படுத்தப்படுகின்றது. சிக்குன்குனியாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
இன்புளுவென்சாவினுடைய அறிகுறியாக தொண்டை நோ, தலை வலி, இருமல் போன்றனவும் இருப்பினும் இது ஒரு வாரங்களிற்குள் மாறிவிடும். இது பெரும்பாலும் தும்மல், இருமல் போன்றவற்றின் மூலம் பரவுவதால் அதனை கட்டுப்படுத்த வேண்டுமாயின் நாம் கைக்குட்டைகளை பயன்படுத்துவது சிறந்தது.
அதே போன்று சமூக இடை வெளிகைளை பேணல், தனிமைப்படுத்தல், காசு மற்றும் கதவுகளில் உள்ள குமிழ்களை துடைப்பதன் மூலமாகவும் அதனை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
5 வயதிற்கு உட்பட்டவர்களையும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களையும் இன்புளுவென்சா அதிகமாக தாக்குவதால் அவர்களுக்கு அதற்குரிய மருந்துகளை கொடுக்க வேண்டும். எனவே இதனை முறையாக கட்டுப்படுத்த வேண்டுமாயின் உரிய சுகாதார வழிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.” என தெரிவித்தார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        