தாய் கண்டித்ததால் வீட்டிலிருந்து ஓடிய சிறுவன்: மீண்டும் தாயிடம் ஒப்படைத்த தொடருந்துநிலைய அதிகாரிகள்
தாய் கண்டித்தமையால் வீட்டிலிருந்து தப்பியோடிய சிறுவனை தொடருந்து பாதுகாப்பு படையினர் பொறுப்பில் எடுத்ததோடு சிறுவனை அவனது தாயிடம் மீள ஒப்படைத்துள்ளனர்.
நேற்று (28) தெமட்டகொட தொடருந்து நிலையத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 12 வயதான சிறுவன் சிலாபம், விலத்தவப் பகுதியைச் சேர்ந்தவன்.
சிறுவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதால் தாயுடனே வசித்து வந்துள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் (27) ஏதோ ஒரு காரணத்துக்காக சிறுவனின் தாய் அவனை கண்டித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனியாக இருந்த சிறுவன்
நேற்று (28) வழக்கம்போல் பாடசாலைக்குச் சென்ற சிறுவன் பாடசாலை முடிந்ததும் சிலாபம் தொடருந்து நிலையத்தில் ஒரு தொடருந்தில் ஏறி தெமட்டகொட தொடருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளான்.

சிறுவன் தனியாக இருப்பதை கவனித்த தொடருந்து நிலைய பாதுகாப்பு பணியாளர்கள் அவனிடம் விசாரித்ததில் விடயம் தெரிய வந்துள்ளது.
பின்னர் சிறுவனின் தாய்க்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமை கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிள்ளையை காணவில்லை என சிறுவனின் தாயும் சிலாபம் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
பின்னர் பிள்ளையை தன் பொறுப்பில் எடுத்துக்கொள்வதற்காக சிறுவனின் தாய் சிலாபம் காவல்துறை அதிகாரிகளுடன் தெமட்டகொடவுக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |