பரிதாபகரமாக உயிரிழந்த சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்
இபலோகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய பெண் ஒருவர் வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கல்நேவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
கல்நேவ, உஸ்கல ஹல்மில்லய பிரதேசத்தில் வசித்து வந்த உதேனி ரசிகா ஏகநாயக்க என்ற 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
முந்திச் செல்ல முற்பட்டபோது நேர்ந்த துயரம்
கடந்த 17ஆம் திகதி பிற்பகல் கல்நேவ பிரதேச செயலகத்திற்கு அருகில் தம்புத்தேகமவில் இருந்து பலலுவெவ நோக்கிச் செல்லும் 'குயின்ஸ் வீதியில்' மோட்டார் சைக்கிளில் பயணித்த உத்தியோகத்தர், மரக்கட்டைகளை வெட்டும் இயந்திரம் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை முந்திச் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானார்.
இதன்போது உழவு இயந்திரத்தின் பின் சக்கரம் அவரது உடலில் ஏறியதில் வீதியின் இடது பக்கமாக விழுந்து பலத்த காயங்களுடன் கல்னாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குடிபோதையில் இருந்த சந்தேக நபர்
உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் அவர் குடிபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான மோட்டார் சைக்கிள் சாரதி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
