சிறுவர்கள் தொடர்பில் மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
சிறுவர்களிடையே போசாக்கு குறைபாடு
சிறுவர்களிடையே போசாக்கு குறைபாடு 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் 15 தொடக்கம் 20 வீதமானவர்கள் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு செலவிடும் பணம்
இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக பிள்ளைகளின் போசாக்கு மட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருவதால், மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு செலவிடும் பணத்தை தமது பிள்ளைகளுக்கு முட்டை அல்லது ஏனைய சத்தான உணவை வழங்குவதற்கு அர்ப்பணிக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாக பெரேரா தெரிவித்தார்.
ஒரு சிகரெட்டுக்கு செலவிடும் பணத்தில் குழந்தைகளுக்கு இரண்டு முட்டைகளை வாங்க முடியும் என்றும் அவர் கூறினார்.
முருங்கை இலையை தினமும் உணவில் சேருங்கள்
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளின் போஷாக்கு குறைபாடு அதிகரித்து வருவதாகவும், அவர்களின் ஊட்டச்சத்து குறித்து பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிறப்பு மருத்துவர் கூறினார். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஏனைய நோய்களுக்கு ஆளாகின்றனர் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு தோட்டத்தில் விளையும் கீரைகளை அதிகளவில் கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் குறிப்பாக முருங்கை இலையை தினமும் உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஏராளமான சத்துக்களை பெற முடியும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான விசேட போசாக்கு
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பெற்றோர்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் மரக்கறிகள் மற்றும் மூலிகைகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்ட வேண்டுமென பெரேரா சுட்டிக்காட்டினார்.
நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கான விசேட போசாக்கு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் இக்காலத்தில் மிகவும் முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.