மகிந்தவின் சகாவுக்கு மீண்டும் விளக்கமறியல்
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேக நபர் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
விசாரணை
இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான அனுஷ பெல்பிட்ட, தனக்குச் சொந்தமான 4 கோடியே 60 இலட்சம் ரூபா பணத்தை எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

அதன்படி, அவர் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23 (அ) 1 இன் கீழ் மோசடியாக சொத்துக்களை சம்பாதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |