வங்காள விரிகுடாவில் உருவாகும் அக்வா புயல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் இலங்கைக்குக் கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மட்டக்களப்புக்குக் கிழக்காக ஏறத்தாழ 650 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத் தொகுதி வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரையை விட்டு விலகி, நாளை (15) ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின் அத் தொகுதி நவம்பர் 16ஆம் திகதியளவில் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு புயலாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடற்றொழிலாளர் சமூகம்
எனவே, கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர் சமூகமும் வட அகலாங்குகள் 050N - 150N இற்கும் கிழக்கு நெட்டாங்குகள் 800E – 900E இற்கும் இடையில் உள்ள ஆழம் கூடிய கடற்பரப்புகளிலும் காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் இன்று (14) அதிகாலை 05.30 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் கடலில் இருப்போர் உடனடியாக இப் பிரதேசங்களை விட்டு விலகி பாதுகாப்பான பிரதேசத்திற்கு நகருமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர் சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து அல்லது வடக்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |