யாழில் அதிகரித்துள்ள நீரிழிவு நோயின் தாக்கம்: 2 இலட்சம் பேர் வரை பாதிப்பு
யாழ். மாவட்டத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமரன், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் இன்று(14) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 2 இலட்சத்துக்கும் அதிக மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.
மேலும் நீரிழிவு நோய் உலகளாவிய ரீதியில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், எமது சமூகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இது ஆரம்பத்தில் வெளிப்படையான அறிகுறிகள் இன்றி உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதிக்கக்கூடிய நோயாக இருப்பதால், 'மௌனக் கொல்லி'யாக உருவெடுக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயை கட்டுப்படுத்தும் திட்டம்
மேலும், இலங்கையில் நீரிழிவு நோயின் பரவல் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 3 முதல் நான்கு வீதமாக இருந்த இந்நோய் தற்போது 30 முதல் 40 சதவீதம் வரையான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் சுமார் ஆறு இலட்சம் மக்கள் தொகையில் இரண்டு இலட்சம் பேர் வரையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் முயற்சிகள் மாத்திரம் போதுமானதல்ல. சமூக அமைப்புகள், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |