6 வயது சிறுமிகளது படுகொலைகளின் பின்னணியில் கருணா, பிள்ளையான்?
இஷாலினி என்ற ஒரு சிறுமியின் மரணம் இன்று இலங்கை முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
அந்தச் சிறுமியின் மரணத்தில் 'ரிசட் பதியுதின்' என்ற பிரபலத்தின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தச் சிறுமியின் மரணம் ஒட்டுமொத்த இலங்கையின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
ஆனால், இன்றைக்கு சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் கிழக்கில் இரண்டு சிறுமிகள் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த அளவிற்கு முழு இலங்கையின் கவத்தையும் ஈர்த்திருக்கவில்லை. அந்த சிறுமிகளின் படுகொலைகளின் பின்னாலும் கருணா மற்றும் பிள்ளையான் போன்ற பிரபல்யங்களின் பெயர்கள் சம்பந்தப்பட்டிருந்த போதிலும் கூட, இன்று இஷாலினியின் படுகொலை பேசப்படுவது போன்று அந்த இரண்டு சிறுமிகளின் படுகொலைகள் இலங்கை முழுவதிலும் பேசப்பட்டிருக்கவில்லை.
- யூட் ரெஜி வர்ஷா என்ற ஆறு வயதுச் சிறுமி
- தினூசிகா சதீஷ் குமார் என்ற எட்டு வயதுச் சிறுமி
இந்த இரண்டு சிறுமிகளும் கடத்தப்பட்டு, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் 'கருணா' என்று அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முறளீதரன் மற்றும் 'பிள்ளையான்' என்று அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் போன்றோரின் பெயர்கள் சம்பந்தப்பட்டிருந்தன.
இந்த இரண்டு பிரமுகர்களுக்கும் அந்தக் காலகட்டத்தில் இருந்த மிகப் பெரிய செல்வாக்கு காரணமாக அவசர அவசரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட அந்த இரண்டு சிறுமிகளின் படுகொலை விசாரணைகள் பற்றி மீண்டும் பேசியேயாகவேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கின்றது.
சம்பவம்-1:
திருகோணமலையிலுள்ள 'செயின்ட் மேரிஸ்' கனிஷ்ட பாடசாலையில் முதலாம் ஆண்டு கல்விகற்றுக்கொண்டிருந்த 6 வயதுச் சிறுமியான வர்ஷா 11.03.2009 அன்று பாடசாலையில் வைத்துக் கடத்தப்பட்டாள்.
சிறுமியின் உயிருக்கு 30 மில்லியன் கப்பம் கேட்கப்பட்ட நிலையில் 13ம் திகதி அவளது உடல் உரப்பைக்குள் கட்டப்பட்டு வீதியோரம் வீப்பட்டிருந்தது.
அந்தச் சிறுமியின் கண்கள், வாய், கைகள் எல்லாம் 'டச் டேப்பினால்' இறுகக் கட்டப்பட்ட நிலையில், உரப்பையினுள் பொதிசெய்யப்பட்டு திருகோணமலை நகரின் சாரதா வீதியில் வீசப்பட்டிருந்தது (கைகள், வாய், கைகள் இறுகக் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள் பொதுவெளியில் பிரசுரிக்கமுடியாத அளவிற்கு கொடுமையாக காணப்பட்டன).
அந்தச் சிறுமியைக் கடத்திக் கொலை செய்த நான்குபேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்கள்.
ஒருவர் பெயர் ஒப்பின் மேர்வின். இவர் TMVP என்ற பிள்ளையான் தலைமையிலான கட்சியின் திருகோணமலைப் பொறுப்பாளர். இரண்டாவது சந்தேக நபர் வரதராஜன் ஜனாரதன் (ஜனா குமரன்) இவரை TMVP உறுப்பினர்கள் 'சுரங்' என்றும் அழைப்பார்கள். TMVP அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலாளர்.
இவர்களுடன் நிசாந்தன் மற்றும் றெஜினோல்ட் போன்றோரும் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள்.
சிறுமியின் கடத்தலில் அப்பொழுது கிழக்கு மகான முதலமைச்சராக இருந்த பிள்ளையானுக்கு நேரடித் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அந்தக் குற்றசாட்டுக்களை அவரது அரசியல் எதிரிகளோ அல்லது கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றாரோ முன்வைக்கவில்லை. பிள்ளையானின் தலைவரும், அவரது போற்றுதலுக்குரிய ஆசானுமான கருணா தரப்பே அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. அப்பொழுது கருணா சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராக பதிவியேற்றிருந்ததுடன், பிரதியமைச்சராகவும் கடமையாற்றிக்கொண்டிருந்தார். அந்த நிலையில் கருணாவின் ஊடகப் பேச்சாளராக இருந்த இனியபாரதி, பிள்ளையான் மீதான அந்தக் குற்றசாட்டை பகிரங்கமாகச் சுமத்தியிருந்தார்.
பதிலுக்கு, அப்பொழுது கிழக்கு மாகான முதலமைச்சராக இருந்த பிள்ளையானின் ஊடகப் பேச்சாளர் அசத் மௌலானா, TMVP உறுப்பினர்களை வைத்து கருணாவே அந்தக் கடத்தல்களைச் செய்ததாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த இழுபறி ஒருபக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்க, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரும் திடீரென்று சிறிலங்கா காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள்.
ஒருவர் தப்பியோட முற்பட்ட போது தம்மால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மற்றுமொரு சந்தேக நபர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், மற்றைய இருவரும் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டைகளில் கொல்லப்பட்டுவிட்டதாகவும் காவல்துறைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
அதாவது இந்த சிறுமியின் கடத்தலின் பின்னணியில் பிள்ளையானோ அல்லது கருணாவோ இருக்கின்றார்களா என்ற உண்மையை கூறக்கூடிய நிலையில் இருந்த சாட்சிகள் நான்கு பேருமே சிறிலங்கா காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள்.
சம்பவம்-2:
மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட்ட வித்தியாலயத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி கற்றுக்கொண்டிருந்த தினூசிகா சதீஷ்குமார் என்ற எட்டு வயதுச் சிறுமி 28.04.2009 அன்று கடத்தப்பட்டு 3 கோடி ரூபாய் கப்பம் கேட்கப்பட்ட நிலையில், அவளது உடல் 02.05.2009 அன்று ஒரு கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.
கருணா மற்றும் பிள்ளையான் குழுவே தமது குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்று உறவினர்கள் குற்றம் சுமத்தினார்கள்.
மட்டக்களப்பு அல்லோலகல்லோலப்பட்டது. 'குற்றவாளிகளை கைதுசெய்யவேண்டும்', 'விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்' என்று கூறி மட்டக்களப்பு நகரில் இருந்த சுமார் 25 பாடசாலை மாணவர்கள் 9 நாட்களாக தொடர் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டார்கள்.
முன்நாள் புளொட் குழு உறுப்பினரும், பின்னர் கருணா குழு மற்றும் ரிஎம்விபி அமைப்பில் இணைந்து செயற்பட்டவருமான கந்தசாமி ரதீஸ்குமார், மற்றும் சுணாமிக்கண்ணன் என்று அழைக்கப்படும் TMVP. அமைப்பின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான திவ்யசீலன் போன்றோர்களின் பெயர்கள் சிறுமியின் கடத்தில் சம்பந்தப்பட்டு பேசப்பட்டன.
இந்த நிலையில், சிறுமி தினுசிகாவின் கடத்தலில் சம்பந்தப்பட்டதாகக்கூறப்பட்ட மூன்றுபேரை மட்டக்களப்பு கள்ளியன் காட்டுப் பகுதிக்கு அழைத்துச்சென்று சுட்டுக் கொலைசெய்தது சிறிலங்கா காவல்துறை.
சிறுமியின் கடத்தலுடன் சம்பந்தப்படட கருணா பிள்ளையான் போன்றோரைக் காப்பாற்றுவதற்காக அவசரகதியில் அந்தப் படுகொலைகளை காவல்துறை செய்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியிருந்தது த.தே.கூட்டமைப்பு.
அந்தக் காலத்தில் TMVPயினர் மீது குற்றம் சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுள் வெறும் உதாரம்தான் இந்த இரண்டு சம்பவங்களும்.
'இஷாலினி' என்ற சிறுமியின் மரணம் தொடர்பில் இன்று ரிசாட் பதியுதின் பெயர் பிரஸ்தாபப்படுத்தப்படுகின்ற அளவிற்கு, 'வர்ஷா', 'தினூசிகா' போன்ற சிறுமிகளின் மரணத்தில் குற்றம் சுமத்தப்பட்ட கருணா பிள்ளையான் போன்றோரின் பெயர்கள் அந்தக் காலத்தில் பேசப்படவில்லை.
விசாரணைகளும் ஒழுங்காக நடைபெறவில்லை.
கிடைத்த சாட்சியங்களின் வாய்களும் அவசர அவசரமாக மூடப்பட்டன.
இஷாலினி என்ற பெண்ணின் மரணத்திற்கு நீதி வேண்டி எப்படி இலங்கையில் 'மனிதம்' எழுந்து நின்று போராடுகின்றதோ, அதே போன்று, வர்ஷா, தினூசிகா உட்பட கிழக்கில் அநீதிக்குள்ளான ஏராளம் சிறுமிகளுக்காகவும் இலங்கை மக்களின் 'மனிதம்' எழுந்து நின்று போராடவேண்டும். நீதிகேட்கவேண்டும்.
வர்ஷாக்களினதும், தினூசிகாக்களினதும் 'ஆன்மாக்கள்' அப்பொழுதான் உண்மையிலேயே சாந்தியடையும்.