வன்புணர்வு செய்யப்பட்ட பிள்ளைகளின் உரிமைகளை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும் : சஜித்
வன்புணர்வு செய்யப்பட்ட பிள்ளைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(4) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைசுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
பொருளாதார அபிவிருத்தி
“நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கும்,வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கும் பெண்களின் பங்கு முதன்மையாக இருக்க வேண்டும் பொருளாதார அபிவிருத்தியில் பெண்கள் முன்னோடியாக மாற வேண்டும்.
மகளிர் உரிமைகளுக்கு எதிரான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். தேர்தல் காலப்பிரவில் பெண்களுக்கான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என பேசப்பட்டாலும், இன்னும் பெண்களுக்கான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவில்லை.
இதற்கென தனியான அதிபர் செயலணி நிறுவப்படும் என்று பேசப்பட்டாலும் அவ்வாறான விடயம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது தெரியாமல் உள்ளது.
அத்துடன் பெண்களின் உரிமைகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச மற்றும் தேசிய இணக்கப்பாடுகள் இருந்தாலும், அவைகள் நடக்கின்றனவா என்பதில் பிரச்சினை இருக்கிறது.
வன்புணர்வு செய்யப்பட்ட பிள்ளைகள் நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகு, அவர்கள் வன்புணர்வு செய்யப்பட்ட தரப்பினருடன் ஒன்றாக உட்கார வேண்டியுள்ளனர். நாட்டின் வங்குரோத்து நிலையில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன.
வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக உரிமைகள் மீறப்பட்டுள்ளன. தேர்தலின் போது இது குறித்து பேசினாலும்,இது உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சிக்கலாகவே உள்ளது.
தேசிய போசணைக் கொள்கை
மேலும் தாய் சேய் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்தும் தேசிய போசணைக் கொள்கை நாட்டுக்கு அவசியம்.
கோவிட் மற்றும் வங்குரோத்து நிலைக்குப் பிறகு,தாய் சேய் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து சரியான கணிப்பீடு நடத்தப்படவில்லை.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து கணிப்பீடு நடத்தப்படவில்லை. இத்தரப்பினர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |