இலங்கையின் நிதி நெருக்கடி -உதவ முன்வந்தது சீனா
பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான ஆதரவை இலங்கைக்கு வழங்குவதாக சீன பிரதமர் உறுதியளித்துள்ளார் .
பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது சீன பிரதமர் லீ கெகியாங் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அதிக ஸ்திரத்தன்மைக்கு சீனா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா கவனம் செலுத்தி வருவதாகவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் சீனப் பிரதமர் கூறினார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கும் சில அவசர நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சீனா செயற்படும் என்றும் சீனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, சீனாவுடனான இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைத்தல் மற்றும் நிலைமை ஏற்படும் போது அதிகமான சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சாத்தியக்கூறுகள் பற்றிய விரைவான பேச்சுவார்த்தைகள் ஆகியவை தொலைபேசி உரையாடலின் போது விவாதிக்கப்பட்டன.
“எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் உறவை மேம்படுத்துவதற்கும் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்” என்று பிரதமர் லீ கூறினார்.
இலங்கையின் சார்பாக அண்மையில் சீனா அறிவித்த மனிதாபிமான உதவி மற்றும் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் ராஜபக்ஷ நன்றி தெரிவித்தார்.
