சீனாவின் வரலாறு காணாத பொருளாதார வளர்ச்சி : 5.3 வீதம் அதிகரிப்பு
உலகப் பொருளாதாரத்தில் எதிர்பாராத வளர்ச்சியை அடைந்த சீனா தற்போது 2ஆவது இடத்தினை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்கத்திற்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வந்த நிலையில், தற்போது அதன் பொருளாதாரம் வெகுவாக வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 5.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
சீனாவின் பொருளாதாரம்
இந்தக் காலப்பகுதியில் சீனாவின் பொருளாதாரம் 4.8 சதவீதமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்திருந்த நிலையில், அந்த அளவை தாண்டி வளர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த காலாண்டு காலப்பகுதியில் சீனாவிற்கு கிடைத்த வளர்ச்சியைக் காட்டிலும் இந்தக் காலாண்டில் 1.6 சதவீதம் வளர்ச்சியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டைவிட (2023) மார்ச் மாதத்தில் சீனாவில் ஏற்றுமதி 7.5 சதவீதமாக சரிவடைந்துள்ளதாகவும், இறக்குமதியும் குறைந்துள்ளதாக சீனா தெரிவித்திருந்த நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
பங்குகள் சரிவு
இந்நிலையில், தொழில்துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டு (2023) இந்த காலஅளவில் இருந்ததை விட 6.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதுடன் சில்லறை விற்பனையும் 4.7 சதவீதமாக காணப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, தொழிற்சாலைகள் மற்றும் உபகரணங்களில் நிலையான முதலீடு, முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
2024இல் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 5 சதவீத வளர்ச்சியை இலக்காக சீனா நிர்ணயித்துள்ள நிலையில் நேற்று (16) வோல் ஸ்ட்ரீட்டில் பங்குகள் பின்வாங்கியதை அடுத்து ஆசிய பங்குகள் கடுமையாக சரிந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |