சீனா வைத்த அடுத்த குறி! மேற்குலக ஊடகங்கள் வெளியிட்டுள்ள பகீர் தகவல்கள்
ஆப்கானிஸ்தானில் உள்ள உலோக வளங்கள் மீது சீனா தனது பார்வையை செலுத்தியுள்ளதாக மேற்கத்தேய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் ஹமீது கர்சாய், அஷ்ரப் கனி ஆகியோர் தலைமையிலான அரசுகள் செயல்பட்ட போதே அங்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களை சீனா மேற்கொண்டிருந்தது. சுரங்கம், தொலைத்தொடர்பு, வீதி அபிவிருத்தி போன்ற திட்டங்களில் முதலீடுகளை சீனா தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தது.
அதேபோன்று, தாமிர சுரங்கம், எண்ணெய் வயல் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளது. இதுதவிர, மருத்துவமனைகள், நீர் சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றையும் செயல்படுத்தியிருந்தது.
அதுமாத்திரமன்றி, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தையும் சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கும் நீட்டிக்க விரும்புவதாக அறிவித்திருந்தது.
இந்தநிலையில் தான், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியதன் பின்னர், தலிபான்களை அங்கீகரிப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று சீனா நேற்று முன்தினம் தெரிவித்தது. தலிபான் ஆட்சியை சீனா அங்கீகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னணியில் இன்னொரு காரணமும் இருப்பதாக தெரிகிறது. ஆப்கானிஸ்தான், உலோக வளம் நிரம்பியது. மிகவும் அரிதான, விலை உயர்ந்த உலோகங்கள் அந்த மண்ணில் உள்ளன.
இந்த உலோகங்கள், ஐபோன், உயர்தொழில்நுட்ப ஏவுகணை வழிகாட்டு சாதனங்கள், மின்சார கார்களுக்கான ரீசார்ஜ் பேட்டரிகள், கொம்ப்யூட்டர், டி.வி.டி. பிளேயர், நீராவி எந்திரம், சூப்பர் கண்டக்டர்ஸ், டெலிவிஷன், மொனிட்டர்கள், லேசர், கண்ணாடி இழைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்க பயன்படுத்தக்கூடியவை.
இந்த உலோகங்கள், 1 லட்சம் கோடி டொலர் முதல் 3 லட்சம் கோடி டொலர்வரை மதிப்புடையவை என்று அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் முன்னாள் தூதர் அகமதுஷா கடாவாசை தெரிவித்துள்ளார்.
இந்திய மதிப்பில் ரூ.75 லட்சம் கோடி முதல் ரூ.225 லட்சம் கோடி டொலர்வரை இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தலிபான் ஆட்சியுடன் நெருக்கமாக உறவினை ஏற்படுத்துவதன் மூலமாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் உலோகங்களை தம்வசம் எடுக்கும் திட்டத்தை சீனா வகுத்து வருவதாக மேற்குல ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.