தடைக்கு மத்தியில் இலங்கைக்குள் நுழையும் ஜேர்மன் கப்பல்: கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் சீனா
ஜேர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளமை குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு ஆராய்ச்சிக்கப்பல்களிற்கு இலங்கை ஒரு வருட தடையை விதித்துள்ள நிலையில் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளமையே எதிர்ப்பிற்கு காரணமாகும்.
ஜேர்மனியின் ஆராய்ச்சி கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமை குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது என தெரிவித்துள்ள ஆசிய இராஜதந்திரியொருவர் அனைத்து நாடுகளினதும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கும் அனுமதி மறுப்பது என இலங்கை தீர்மானித்திருந்தால் சீனா இந்த விடயத்தை பெரிதுபடுத்தியிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் ஆராய்ச்சிக் கப்பல்
இதேவேளை ஜேர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சிக் கப்பலிற்கு இலங்கை அனுமதி வழங்கியதை அரசாங்க வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன.
தற்போது ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்கியுள்ளதால் சீனா தனது கப்பல்களிற்கும் அனுமதியை கோரும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ஜேர்மன் ஆராய்ச்சிக் கப்பலை அனுமதித்த இலங்கை, கடல்சார் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் கப்பல்களிற்கே இலங்கை தடை விதித்துள்ளது எனவும் ஆராய்ச்சிக் கப்பல்கள் எரிபொருள் மீள்நிரபுப்புதலில் ஈடுபடுவதற்கு இலங்கை தடை விதிக்கவில்லை என வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |