சீனாவிடம் இருந்து இலங்கைக்கான எரிபொருள் உதவி! வழங்கப்பட்ட உறுதிமொழி
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட தமது நாடு அனுமதிக்காது என இலங்கைக்கான சீனத் தூதர் கி சென் ஹாங் தெரிவித்துள்ளார்.
கண்டி, அஸ்கிரியாவில் உள்ள சந்தானந்த பௌத்தக் கல்லூரியில், அப்பகுதியைச் சேர்ந்த 350 ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், ஊடகங்களிடம் பேசிய தூதர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இராணுவச் சூழல்
“சீனா எல்லா நேரங்களிலும் உதவியையும் ஆதரவையும் வழங்கி வந்துள்ளது. இதற்கு இரு நாடுகளுக்கும் இடையே தொன்றுதொட்டு நிலவி வரும் நட்புறவே முக்கிய காரணம்.

மத்திய கிழக்கில் நிலவும் இராணுவச் சூழல் காரணமாக உலகின் சில நாடுகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எந்த நேரத்திலும் வழங்க சீனா தயாராக இருக்கும்.
ஏதேனும் காரணத்தால் நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால், சீன நிறுவனமான சினோபெக் மூலம் நிலைமை சமாளிக்கப்படும்.
இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் சீன அரசாங்கம் வழங்கும்.
மத்திய கிழக்கு போரில் தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. அது தொடர்ந்தால் தாம் ஆதரவளிப்போம்.
இருப்பினும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ளவும், இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் சீனா தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |