ஈரானுக்கான ஆயுத விநியோகம்...! சீனா - ரஷ்யாவிற்கு ட்ரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை
சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் இரு நாடுகளின் தலைவர்களும் தமக்கு இது குறித்து உறுதியளித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் இது குறித்து அவர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பெய்ஜிங்கில் நடைபெற்ற எங்களது சமீபத்திய சந்திப்பின் போது எக்காரணம் கொண்டும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்பனை செய்யவோ மாட்டேன் என ஜனாதிபதி ஷி ஜின்பிங் என்னிடம் உறுதியளித்தார்.
மோசமான விளைவுகள்
அதில் சீன நிறுவனங்களும் அடங்கும்.
எங்களது உறவைக் கருத்தில் கொண்டு அவரது வார்த்தையை நான் நம்புகிறேன்.
தவிர, நானும் அவருக்குப் பெரிய உதவிகளைச் செய்து வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும், மோஸ்கோ ஈரானுக்கு ஆயுதங்களை விற்காது எனத் தன்னிடம் தெரிவித்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஈரானுடன் தொடர்புபடுத்திப் பேசப்படும் இரு முக்கிய உலக நாடுகளும் போரில் பங்கேற்கவில்லை என்றும் ஒருவேளை அவர்கள் அப்படிச் செய்தால் அது அவர்களுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |