இலங்கையின் கடன் மறுசீரமைப்பு - சீனா வெளியிடவுள்ள எழுத்து மூல அறிவிப்பு
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் நிலைப்பாடு இன்று (22) சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அறிவிப்பை எழுத்து மூலம் சீனா இன்று வெளியிடும் என இந்திய நாளிதழ் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை கடந்த 16ஆம் திகதி, சர்வதேச நாணய நிதியத்துக்கு இந்தியா எழுத்துபூர்வமாக தெரிவித்திருந்தது.
கடன் வசதி
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் தமது உடன்படிக்கையை எட்டவுள்ளதாக திறைசேரியின் பிரதிச் செயலாளர் பிரியந்த ரத்நாயக்க கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உலக செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில், கலந்துரையாடல்களின் இரகசியத்தன்மை காரணமாக, அது தொடர்பான கலந்துரையாடல்கள் குறித்த தகவல்களைத் தர முடியாது என பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு இந்தியா ஏற்கனவே ஆதரவளித்துள்ளதால், சீனாவும் தனது நிலைப்பாட்டை விரைவில் தெரிவிக்கும் என்று திறைசேரியின் பிரதிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவும், இந்தியாவும் இலங்கைக்கு கடன் வழங்கும் பிரதான நாடுகள் எனவும், தமது நிலைப்பாட்டிற்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் வசதி தொடர்பில் உடன்பாட்டை வெளிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

