இலங்கை அரசாங்கத்திடம் இந்திய அரசியல் கட்சி முன்வைத்த கோரிக்கை..!
1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையில் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம், உரிய முறையில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று நிகழ்வு ஒன்றில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன் இந்த உடன்படிக்கை, நடைமுறைப்படுத்தப்படுவதை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் முடிவை வரவேற்கிறேன்
இதேவேளை சீனாவின் யுவான் வாங் 5 என்ற ஆய்வு கப்பலை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்காத இலங்கை அரசங்கத்தின் முடிவையும் அவர் வரவேற்றுள்ளார்.
ஹம்பாந்தோட்டைக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள சீனாவின் விண்வெளி கண்காணிப்பு கப்பலின் பயணம் தொடர்பில் இந்திய கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன.
தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, இந்தியா, குறித்த சீனக் கப்பல் பயணத்துக்கான உண்மைக் காரணத்தை கோரியதை அடுத்து கப்பலின் பயணத்தை பிற்போடுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.