கொதிநிலையில் சீன கப்பல் விவகாரம்..! சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கும் உளவு விமானம்
இலங்கைக்கு உள்ளூர் தயாரிப்பான டோர்னியர் உளவு விமானத்தை வழங்க இந்தியா திட்டமிட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த மாத நடுப்பகுதியில் குறித்த விமானம் இலங்கைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சூடுபுடிக்கும் சீன கப்பல் யுவான் வாங் 05
ஓகஸ்ட் 11 ஆம் திகதியன்று இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைத் தரவிருந்த சீன உளவு கப்பலான யுவான் வாங் 05 க்கு இந்தியா ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து அந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை, இந்தியாவிடம் ராஜதந்திர ரீதியில் கோரியிருந்தது.
எவ்வாறாயினும், இதனை கடுமையாக ஆட்சேபித்துள்ள சீனா, இந்தியாவையும் எச்சரித்திருந்தது.
இந்தியா வழங்கும் உளவு விமானம்
இந்தநிலையிலேயே தமது உளவு விமானமான டோர்னியர் 228 என்ற விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ளது.
டோர்னியர்-228 உளவு விமானம், இந்தியக் கடற்படையால் போர்ப் பணிகள், கடல் கண்காணிப்பு மற்றும் ஏனைய பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இலங்கையும் இந்த உளவு விமானத்தை கடல் கண்காணிப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தும்; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.