சீனாவிடம் சிறிலங்கா விடுத்துள்ள கோரிக்கை - ரணிலுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சவால்!
சீனா, சிறிலங்காவிற்கு வழங்கிய கடன் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது, சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டுள்ள கடன் சம்பந்தமான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுமாறே சீனாவிடம் கோரிக்கை விடுப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன் சீனாவுடன் கடன் சம்பந்தமான கொடுக்கல், வாங்கலுக்கு வருவது இலகுவான காரியமல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடன்களை மறுசீரமைக்கும் அவசியம் மற்றும் சகல கடன் வழங்குநர்களுக்கும் ஒரே முறைமையை பின்பற்றும் தேவை குறித்தும் சீனாவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
சீனாவுடனான உடன்படிக்கை ஏனைய கடன் வழங்குநர்களுக்கு கேள்வியாக அமைந்துள்ளது
ஆனால், சீனா உண்மையில் வேறு வகையான அணுகுமுறையை கையாளும். இதனால், சீனாவுடன் ஏற்படுத்திக்கொள்ள போகும் உடன்படிக்கை என்ன என்பது ஏனைய கடன் வழங்குநர்களுக்கு ஒரு கேள்வியாக உள்ளது.
அதேவேளை தமது வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருளாதாரம் குறித்து கவனத்தில் கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. வாழ்க்கை மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்களிடம் கொள்வனவு செய்யும் பலம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரத்தின் சுருக்கமான வேகத்தை நாங்கள் தற்போது காண்கின்றோம் எனவும் ணைில் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் பெறவுள்ள சீனாவின் கடன் மறுசீரமைப்பு
இவ்வாறான நிலையில், இந்திய பெருங்கடலில் வங்குரோத்து அரசாங்கத்திற்கு மிகப் பெரியளவில் கடன் வழங்கும் நாடான சீனாவிடம் விடுக்கப்படும் கோரிக்கையானது, அந்நிய செலாவணி தட்டுப்பாடு மற்றும் வறுமை நிலைமையில் இருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும், நாட்டின் நிதி குழுவுக்கும் தலைமை தாங்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரிய சவாலாக இருக்கும்.
தற்போது இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் சீனாவின் இந்த கடன் மறுசீரமைப்பு தொடர்பான விடயம் முக்கியத்துவம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

