இந்தியர்களை கடத்திய அல்கொய்தா பயங்கரவாத குழுவால் பரபரப்பு
அண்மையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் காய்ஸ் பகுதியில் அமைந்துள்ள டையமண்ட் சீமெந்து ஆலையில் நடைபெற்ற ஆயுததாரிகளின் தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
கடத்தலுக்குப் பின்னால், அல்கொய்தாவுடன் தொடர்புடைய ‘ஜமாத் நுஸ்ரத் அல் இஸ்லாம் வல் முஸ்லிமீன்’ (JNIM) என்ற பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்காத நிலை நீடிக்கிறது.
அவசர நடவடிக்கை
கடத்தப்பட்டவர்கள், ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரகாஷ் சந்த் ஜோஷி, தெலுங்கானாவின் மிர்யலகூடாவைச் சேர்ந்த 45 வயதான அமரலிங்கேஸ்வர ராவ் மற்றும் ஒடிசாவின் கண்ஜாம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான பி. வெங்கடராமன் ஆகியோராவர்.
இந்த நிலையில், சம்பவம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் மாலி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அந்தத் தூதரகம் அவசர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மாலி உள்ளிட்ட சஹெல் பிராந்திய நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியத் தொழிலாளர்கள் இந்த பிராந்தியத்தில் கட்டுமானம், சுரங்கம், உள்கட்டமைப்பு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பு
தற்போதும் சுமார் 400 இந்தியர்கள் மாலியில் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த கடத்தல் சம்பவம், மாலி மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளது.
இதேவேளை, மூவரும் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்களது குடும்பத்தினரும், இந்திய பொதுமக்களும், அரசாங்கத்திடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

