இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய சவால் - சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு சீனா விடுத்துள்ள அழைப்பு!
இலங்கையின் கடன் பிரச்சினை தொடர்பில், இலங்கையின் நெருக்கடி மற்றும் சவால்களுக்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான விரைவான முன்னேற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இந்த வாரம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு அழைப்பு
இவ்வாறான நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச நிதி நிறுவனங்களுடன் சீனா நீண்ட காலமாக நல்ல ஒத்துழைப்புடன் செயற்படுகிறது என்று சீன வெளிவிவகார அமைச்சர் மாவோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்கை ஆற்றுவதற்கு, தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் தம்முடன் இணைந்து செயல்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையுடன் தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படுவதோடு, இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தொடரும் என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
