சீன ஜனாதிபதியின் ஆக்ரோஷப் பேச்சு! கொந்தளித்துப்போயுள்ள முன்னாள் அமைச்சர்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் சீன ஜனாதிபதி ஆற்றிய உரையை வொஷிங்டன் தீவிரமான ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அமெரிக்கா பலவீனமான நாடு என்று குறிப்பதாக அப்பேச்சு அமைந்துள்ளதாக டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய முன்னாள் அமெரிக்க அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு முக்கியமான விடயங்களில் எந்த நாடாவது குறுக்கீடு செய்யுமானால் அதன் தலை சீன பெருஞ்சுவரில் மோதி சிதறடிக்கப்படும் என்று சீன ஜனாதிபதி ஸிஜின்பிங் தனது உரையில் குறிப்பிட்டிருந்ததை மேற்கோள் காட்டிய முன்னாள் அமைச்சர்,
பீஜிங் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஜோ பைடனின் நிர்வாகத்துக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா பலவீனமடைந்திருப்பதாக சீன ஜனாதிபதி கருதுவதால் பைடன் நிர்வாகம் சீன பயமுறுத்தலை தீவிரமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோளை விடுத்தார்.
ஏனெனில் இச்சீன ஆக்ரோஷத்தை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இல்லாத ஒரு நிலையையே நாம் கடந்த ஆறு மாதங்களாக பைடன் நிர்வாகத்தில் பார்த்து வருகிறோம் என்றும் பொம்பியோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.