மைத்திரியை தேடிச்சென்று சந்தித்த சீன தூதுவர்(படங்கள்)
சீன தூதுவர் -மைத்திரி சந்திப்பு
சீனத் தூதுவர் கி சோங்ஹோங் மற்றும் முன்னாள்அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (10) பொலனறுவை புதிய நகரிலுள்ள மைத்திரிபால சிறிசேன இல்லத்தில் இடம்பெற்றது.
தனது வீட்டிற்கு வருகை தந்த சீன தூதுவருக்கு நன்றி தெரிவித்த சிறிசேன, பொலனறுவை மாவட்டத்தின் வரலாற்று மதிப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்து அவருக்கு விளக்கினார்.
குறிப்பாக, பல தசாப்தங்களாக இலங்கைக்கு சீனா அளித்து வரும் ஆதரவிற்கு முன்னாள் அரச தலைவர்,சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் பொலனறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள தெற்காசியாவிலேயே மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலையை நன்கொடையாக வழங்கியமைக்காக சீன அரச தலைவர் மற்றும் சீன அரசாங்கத்திற்கு மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்தார்.
தனது ஆட்சிக் காலத்தில் சீனாவுடன் நெருக்கமாகச் செயற்பட முடிந்ததாகவும், இதன் மூலம் இலங்கைக்கு பெருமளவிலான சீன உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடிந்ததாகவும் முன்னாள் அரச தலைவர் சீனத் தூதுவரிடம் தெரிவித்தார்.
கடும் பொருளாதார நெருக்கடி
இந்நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதுவர், இலங்கைக்கு நட்பு நாடு என்ற வகையில் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார். சீனாவின் விசேட நன்கொடையாக நாளைய தினம் மருந்துப்பொருட்களை வழங்கவுள்ளதாகவும் எதிர்காலத்தில் மேலும் பல விசேட உதவித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அண்மையில் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பாக ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடினுக்கு மைத்திரிபால சிறிசேன எழுதிய கடிதத்தை சீனத் தூதுவர் பாராட்டினார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க சிரேஷ்ட அரசியல்வாதி என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவின் செயலூக்கமான பங்களிப்பு மிகவும் அவசியமானது என தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு சீன அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அதற்குத் தேவையான ஆதரவை எதிர்பார்த்திருப்பதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.





