இந்தியா - இலங்கையை உளவு பார்க்க சீன புறா..!
நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர் படகில் இலங்கை புறா தஞ்சமடைந்தது. அதன் காலில் கட்டப்பட்ட வளையத்தில், சீன எழுத்துக்கள் இருந்ததால், இந்தியா அல்லது இலங்கையை சீனா உளவு பார்க்க அனுப்பியதா என்று பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
கடந்த 15ம் திகதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அரசபாண்டி என்பவரது நாட்டுப்படகில், பாம்பனில் இருந்து 13 கிலோமீற்றரில பாக் ஜலசந்தி கடலில் மீனவர்கள் மீன் பிடித்தனர்.
அப்போது வானில் வட்டமடித்த புறா ஒன்று, திடீரென படகில் தஞ்சமடைந்தது. குறித்த புறாவின் காலில் உள்ள வளையத்தில், "இலங்கை யாழ்ப்பாணம் சுதன்" என்றும் தொலைபேசி எண் ஒன்றும் எழுதப்பட்டிருந்தது.
காலில் சீன எழுத்துக்கள்
மற்றொரு காலில் சீன எழுத்துக்கள் பொறித்த ஸ்டிக்கர், அதன் கீழே எம்.எப்., 3209 என எழுதப்பட்டிருந்தது. இதன் காரணமாக குறித்த புறா சீனாவால் இந்தியா அல்லது இலங்கையை உளவு பார்ப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டாத என சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.
இதனையடுத்து ஐபிசி தமிழ் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கேட்ட போது -
கேள்வி - உங்களுடைய பெயர் பொறிக்கப்பட்ட தகட்டுடன் ஒரு புறா இந்திய கடலில் சிக்கியிருக்கிறது, அதற்கும் உங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ?
பதில் - ஆம், அந்த புறாவின் உரிமையாளர் நான் தான், குறித்த புறா பந்தய ஓட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற புறா.
கேள்வி - குறித்த புறாவின் காலில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தகடு ஒன்று காணப்படுகிறது, அதை பற்றி உங்களுடைய கருத்து ?
பதில் - ஓட்டப்பந்தயங்களில் இரகசிய இலக்கமிடுவதற்கே குறித்த தகடு (புறாவின் காலில் பூட்டபட்டு இருந்த வளையம்) பயன்படுத்தப்படுகிறது. அது சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றமையால் தான் குறித்த தகட்டில் சீன எழுத்துக்கள் காணப்படுகிறது, மேலும் அந்த தகடு சகல புறா பந்தய வளர்ப்பாளர்களிடமும் உள்ளது. எனவும் தெரிவித்தார்.
ஆக, குறித்த புறா உளவு பார்ப்பதற்காக அனுப்பட்டதா என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சைகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் குறித்த புறா பந்தய ஓட்டத்தின் போது வழிமாறி சென்று இருக்கலாம் என்றுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
