சீன உறவால் இலங்கைக்கு ஆபத்து - பகிரங்கமாக எச்சரிக்கை
அயல்நாடான இந்தியாவைவிடுத்து, தொலைவிலுள்ள சீனாவுடன் தொடர்புகளைப் பேணுவதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் எமது நாடும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் (Thushara Indunil) கூறியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், உக்ரைனுக்கு ஏற்பட்ட நிலையை மேற்கோள்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கருத்துரைத்த அவர்,
“உக்ரைன் அதற்கு மிக அருகிலுள்ள பலம்பொருந்திய நாடான ரஷ்யாவின் நிலைப்பாட்டைக் கருத்திற்கொள்ளாமல், தொலைவிலுள்ள ஏனைய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணியமையின் விளைவாகத் தற்போது நெருக்கடியில் சிக்குண்டுள்ளது.
இந்த நெருக்கடி நிலைமையிலிருந்து நாம் சரியான பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
வரையறைகளின்றி, இராஜதந்திர ரீதியான நகர்வுகளுக்கு அப்பால் வெளிநாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும்” என துஷார இந்துனில் வலியுறுத்தியுள்ளார்.
