ரணில் மற்றும் தினேஷ் குணவர்தனவிற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் : வீடுகளுக்கு செல்லவுள்ள சிஐடி
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (keheliya rambukwella), மருந்துகள் பற்றாக்குறை என்ற போர்வையில் இந்தியக் கடனுதவியின் கீழ் 182 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக அடுத்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன (dinesh gunawardena) ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இரகசிய காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவிற்கு(india) விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பிய பின்னர், இந்த சம்பவம் தொடர்பில் அவர் மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வீடுகளுக்கு செல்லவுள்ள காவல்துறை
அவர்களது வசிப்பிடங்களுக்குச் சென்று அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கான திகதி மற்றும் நேரங்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 2022 செப்டெம்பர் 26ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் நாட்டுக்கு என்ன மருந்துகள் தேவை என்பது தொடர்பாக அமைச்சரவை உறுப்பினர்களை விசாரித்து அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிஸ் லக்மினி கிரிஹாகம விடுத்த கோரிக்கையை ஏற்று மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம வீரசிங்க இரகசிய காவல்துறையினருக்கு வழங்கிய அனுமதியின் பிரகாரம் அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டதன் அடிப்படையில், குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சரவை அமைச்சர்கள் இரகசிய காவல்துறைக்கு அழைக்கப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை
இதன்படி, இரகசிய காவல்துறையில் முன்னிலையான அமைச்சரவை அமைச்சர்களில், முன்னாள் சுகாதார அமைச்சர் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி அமைச்சரவையில் இந்த மருந்து இறக்குமதிக்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்தபோது, நாட்டுக்கு என்ன மருந்துகள் தேவை? அது கூட குறிப்பிடப்படாத போது உண்மையில் மருந்து தட்டுப்பாடு இருந்ததா? அமைச்சரவைப் பத்திரத்தை ஆராயாமல் அமைச்சரவை எவ்வாறு அங்கீகாரம் வழங்கியது? என்பது தொடர்பாக ரகசிய காவல்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, டக்ளஸ் தேவானந்தா, ஹரீன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, விஜயதாச ராஜபக்ச, விதுர விக்ரநாயக்க, கஞ்சன விஜேசேகர, புஷ்பகுமார, நசீர் அஹமட் மற்றும் நளின் பெர்னாண்டோ போன்ற 18 முன்னாள் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களிடம் இதற்கு முன்னர் இரகசிய காவல்துறையினர் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |