பொகவந்தலாவ ஆர்ப்பாட்டத்தில் இரு கட்சி ஆதாரவாளர்களுக்கு இடையில் மோதல்
வீடமைப்பு திட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தலைவர் வேண்டப்பட்டவருக்கு வீடு வழங்கி பணம் பெற்றதாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய இருதரப்பு ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
பொகவந்தலாவ தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இன்று (15.02.2024) வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வீடமைப்பு திட்டம்
குறித்த மோதலினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு ஆதரவாளர்களும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சங்கத்தின் மூன்று ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடிகல் நாட்டும் நிகழ்வு
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தெரிவிக்கையில், “எதிர்வரும் 19 ஆம் திகதி பொகவந்தலாவ பகுதியில் அமைக்கப்பட உள்ள இந்திய வீடமைப்பு திட்டத்திற்கு அடிகல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதனடிப்படையில் இந்நிகழ்வுக்காக குறித்த பகுதியில் உள்ள காணியினை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே மேற்படி மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நான்கு ஆதரவாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களை தாக்கியுள்ளதாக முறைப்பாடு பொகவந்தலாவ காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |