கிளப் வசந்த கொலை விவகாரம் : மற்றுமொருவர் கைது
அத்துருகிரியவில் அண்மையில் இடம்பெற்ற கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் (08) திகதி அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவில் வைத்து, துப்பாக்கிதாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பேரேரா மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட மேலும் ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வெளிநாட்டிலிருந்து இச்சம்பவம் திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளரும் உடந்தையாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்திருந்தது
சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |