நிலக்கரி கொள்முதல் முறைகேடுகள்! மூன்றாவது நாளாக பதிவு செய்யப்படும் சாட்சியம்
நிலக்கரி கொள்முதல் பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு, நாளை (13) தொடர்ந்து மூன்றாவது நாளாக சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளது.
இதன்படி, நொரோச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் பிரதி மேலாளர் ஏ.பி.எம். துஷன் அபேய்கூன் மற்றும் மேலும் இரண்டு அதிகாரிகள் நாளை சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதி மேலாளர் ஏ.பி.எம். துஷன் அபேய்கூன், இதற்கு முன்னர் கடந்த புதன்கிழமை, ஜூலை 8 அன்று, சாட்சியம் அளிப்பதற்காக ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தார்.
முறைகேடுகள் குறித்த விசாரணை
இதுவரை, நான்கு அதிகாரிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சாட்சியம் அளித்த மற்ற அதிகாரிகள், எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சோ, அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் நிறுவனங்களின் பதிவாளர் ஷ்யாமா ஹர்ஷனி ஆகியோர் என தெரிவிக்கப்படுகிறது.

2009-ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கரி பரிவர்த்தனைகள் மற்றும் அது தொடர்பான நடைமுறைகளில் கூறப்படும் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, நிலக்கரி கொள்முதல் பரிவர்த்தனைகளை விசாரிக்கும் சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |