தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு!
நாட்டில் தேங்காய் விலை அதிகரித்ததை தொடர்ந்து, இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் விலை 800 ரூபா வரையிலும் தேசிய உள்நாட்டு தேங்காய் எண்ணெய் விலை 750 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர் புத்திக த சில்வா தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் விலைப்பட்டியலுக்கு அமைய, நேற்று முன்தினம்(11) 741 ரூபா முதல் 747 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் விலை
அந்த விலைப் பட்டியலுக்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி 694 ரூபாவுக்கு விற்பனையான தேங்காய் எண்ணெய், தற்போது 750 ரூபா வரையில் விற்பனையாவதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.
அந்த விலைப்பட்டியலுக்கு அமைய நேற்று முன்தினம்(11) தேங்காய் ஒன்று 195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேங்காய் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தியும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தேங்காய் ஒன்றுக்கு சந்தையில் நிலவும் விலையின் அடிப்படையில், தேங்காயை கொள்வனவு செய்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்வதால் தமக்கு இலாபம் கிடைக்காது என்று அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ தேங்காய் எண்ணெயின் விலை 800 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதான ஒருங்கிணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |