தேங்காய் தட்டுப்பாட்டிற்கு வருகிறது தீர்வு : துரிதகதியில் நடவடிக்கை
நாட்டின் தேங்காய் தேவையை பூர்த்தி செய்வதில் நிலவும் தொடர்ச்சியான சிரமங்களுக்கு நீண்டகால தீர்வாக 40,000 ஏக்கர் புதிய தென்னை தோட்டங்களை பயிரிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு துணை அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்தன, தேங்காய் பற்றாக்குறையை குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் மூலம் நிவர்த்தி செய்து வருவதாகக் கூறினார். "குறுகிய கால தீர்வுகளில் ஒன்று தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கான சமீபத்திய முடிவு. ஆனால், அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது எங்கள் நீண்டகாலத் திட்டமாகும்."
40,000 ஏக்கர் புதிய தென்னம் தோட்டங்கள்
நீண்டகால உத்திகளில் பல திட்டங்கள் அடங்கும் என்றும் அவர் மேலும் கூறினார். "குறிப்பாக தேங்காய் சாகுபடி பகுதிகளில், விலங்குகளால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஏற்கனவே உள்ள தோட்டங்களில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் நாங்கள் விரும்புகிறோம். மேலதிகமாக, சுமார் 40,000 ஏக்கர் புதிய தென்னை தோட்டங்களை பயிரிட திட்டமிட்டுள்ளோம்," என்று துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான தேங்காய் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, இது வீட்டு நுகர்வு மற்றும் தேங்காய் சார்ந்த தொழில்கள் இரண்டையும் பாதிக்கிறது.
தென்னை சாகுபடி நிலங்கள் விற்பனை
இதற்கிடையில், தேங்காய் விளையும் நிலங்களை தடையின்றி விற்பனை செய்வது தேங்காய் பற்றாக்குறைக்கு ஒரு காரணமாக இருப்பதால், தென்னை சாகுபடி நிலங்களை விற்பனை செய்வது தொடர்பான தற்போதைய சட்ட விதிகள் மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்று நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம் சமீபத்தில் கூறியது.புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றாலும், தற்போதைய சட்டங்கள் மிகவும் திறம்பட செயல்படுத்தப்படும் என்று நிலம் மற்றும் நீர்ப்பாசன துணை அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
