காலி முகத்திடல் போராட்டம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு! நிராகரித்த நீதிமன்றம்
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி சிறிலங்கா காவல்துறையினர் செய்த விண்ணப்பத்தை கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஏ.பிரபாகரன் இன்று சனிக்கிழமை (23) நிராகரித்துள்ளார்.
போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படும் 16 பேரின் பெயர்களை கோட்டை காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
பல நாட்களாக காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடுவது பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் போக்குக்கு வழிவகுக்கும் என காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அதற்கு எதிரானவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த 16 பேர் தொடர்பில் உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும், வன்முறை அல்லது பொது இடையூறு ஏற்படுவதற்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என மேலதிக நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோதமான செயல்கள் இடம்பெற்றால், காவல்துறை கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைய தேவையான நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளதாகவும் மேலதிக நீதவான் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெருமளவான சட்டத்தரணிகள் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்மை குறிப்பிடத்தக்கது.
