மல்லாவி இராணுவ லெப்டினன்ட் கர்னல் அதிரடி கைது!
மல்லாவி இராணுவ முகாமில் பணியாற்றும் லெப்டினன்ட் கர்னல் ஒருவர், பாதாள உலக தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்தவிற்கு ஆயுதங்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, மேற்கு மாகாண (வடக்கு) குற்றப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரண்டு முறை 260 தோட்டக்கள்
தற்போது காவலில் உள்ள திலின சம்பத் என அழைக்கப்படும் ‘வாலஸ் கட்டா’விடம் நடந்த விசாரணையிலிருந்து கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, குறித்த இராணுவ அதிகாரி வாக்குமூலம் பதிவு செய்ய அழைக்கப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இராணுவத்தில் மேஜராக பணியாற்றிய காலத்தில், தற்போது காவலில் உள்ள கமாண்டோ சலிந்த அவரின் உதவியாளராக இருந்துள்ளார்.
அந்த காலப்பகுதியில், குறைந்தது இரண்டு முறை 260 தோட்டக்களை வழங்கியதாகவும், அதற்குப் பதிலாக சலிந்த சுமார் ரூ. 6.5 இலட்சம் அவரது வங்கி கணக்கில் வைப்பு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
எவ்வாறாயினும், விசாரணையின் போது அவர் ஆயுதங்களை குற்றவாளிகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இந்நிலையில், பாதாள உலக கும்பல்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அதிகாரி தற்போது பாலைநகர் இராணுவ முகாமின் தளபதியாக பணியாற்றி வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
