திலீபனின் நினைவேந்தல் - பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாவாரா சிவாஜிலிங்கம்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு நீதிமன்ற கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடையை மீறி தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த நீதிமன்ற கட்டளையை காவல்துறையினர் வழங்கியுள்ளனர்.
சிவாஜிலிங்கத்தின் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு நீதிமன்ற தடையை மீறி அனுஸ்டித்த குற்றச்சாட்டின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் கோண்டாவில் பகுதியில் அன்னங்கை ஒழுங்கையில் வைத்து 2020 செப்டம்பர் 15ம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவுகூர்ந்தமை உள்ளிட்ட குற்றசாட்டின் கீழ் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட எம்.கே. சிவாஜிலிங்கத்தை நீதிமன்றம் எச்சரித்து 2 இலட்ச ரூபாய் கொண்ட சரீரப் பிணையில் விடுவித்திருந்தது.
கொழும்பு மேல் நீதிமன்ற அழைப்பாணை
தீலிபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக கைது செய்து 24 மணி நேரம் தடுத்துவைக்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பயங்கரவாத தடைச்சட்ட வழக்கை புகுத்தக்கூடிய வகையிலே காவல்துறையினர் முயற்சிகள் எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
குறித்த விடயம் மீண்டும் சென்ற வருடம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், அவரை பயங்கரவாத தடை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
இந்தநிலையிலே, குறித்த விடயம் தொடர்பாக தன்னை மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றம் விசாரணைக்கு அழைத்துள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செயலுக்காக யாழ்ப்பாணத்தில் உயர்நீதிமன்றம் இருக்கத்தக்கதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நோக்கம் என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்தார்களா அல்லது பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒத்ததாக புலிகளின் மீளுருவாக்கம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கிறதா என்பது குற்றப்பத்திரிகை வழங்கிய பின்னரே தெரியும் எனவும் கூறியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கும் இலங்கை மக்களுக்கும் வாக்களித்தநிலையில், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
