கொழும்பில் கடும் மழை -ஆழ்ந்த உறக்கத்திலிருந்த கட்டட தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக கட்டட நிர்மாண பணிகள் இடம்பெறும் பகுதியொன்றில் நிரம்பியிருந்த நீரில் மூழ்கி கட்டட தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையிலுள்ள குறித்த வேலைத்தளத்தில் வாகனம் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டு வந்த இடத்தில் 12 அடி உயரத்துக்கு நீர் நிரம்பியுள்ளது.
முதல் மாடியும் இரண்டரை அடி ஆழத்தில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிர்மாணப் பணிகளில் பணியாற்றிய ஊழியர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அவர் ஊவா பரணகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் பணிமுடிந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையிலேயே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கு பாதுகாப்பற்ற முறையில் ஊழியர்கள் பணி புரிவதாக தெரியவருகிறது. தீயணைப்பு படை வீரர்களின் 10 மணித்தியால தேடுதல் நடவடிக்கையின் பின்னரே உயிரிழந்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.