கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: படுகாயமடைந்த யுவதி உயிரிழப்பு
கொழும்பு - புறக்கோட்டை, 2ம் குறுக்குதெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ பரவலில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தீ விபத்தில் சுமார் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
6 பேரின் நிலைமை கவலைக்கிடம்
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 11 பெண்கள் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையிலேயே காயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் சிக்கிய வட்டகொட கீழ்ப் பிரிவைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.