அரசியல் பழிவாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சூளுரை!
அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட அனைவருக்கும் சலுகை வழங்கியே தீருவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
பூலோக ரீதியாக பாகங்களாக பிரித்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அபிவிருத்தியின் பிரதிபலன் நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் சரி சமமாக பகிரப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுப்பதன் காரணமாக ஒரு சிலர் விமர்சிக்கின்றனர். அது மட்டுமன்றி மக்களுக்கு பகிர்ந்தளிப்பது வருத்தமளிக்கின்றது.
அரசியல்வாதிகளும் பணம் படைத்தோர்களும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது தொடர்பில் எவரும் வாய்த்திறப்பதில்லை. முதலாளிமார்கள், பணம்படைத்தோர் பற்றி மாத்திரமின்றி சூரையாடலுக்கு உள்ளாகும் மக்கள் தொடர்பில் ஆராயும் பொறுப்பை கைவிடமாட்டேன்.
பல வருடங்களாக பல துயரங்களுக்கு மத்தியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பலர் உள்ளனர்.
தான் ஆட்சிக்கு வந்ததும் முதலாவதாக முன்னெடுக்கும் பணியானது அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கபட்டவர்களுக்கு சலுகை பெற்றுக்கொடுப்பதாகும். 1994 ஆம் ஆண்டு தொடக்கம் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட அனைவருக்கும் சலுகை வழங்கியே தீருவேன் எனவும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.








