விமானத்தில் கைதான இளைஞன் -காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு (மூன்றாம் இணைப்பு)
(மூன்றாம் இணைப்பு)
கட்டுநாயக்காவில் விமானத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகளால் இன்று (26) மாலை கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் தெளிவுபடுத்தும் அறிவிப்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 13 ஆம் திகதி தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் வன்முறையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று அங்கு நேரலையில் தோன்றி அதன் ஒளிபரப்பு நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியதையடுத்து, கோட்டை மற்றும் காலி முகத்திடலில் வன்முறைப் போராட்டங்களுக்கு வழிவகுத்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரே இவராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெபட குருநாகல் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர்.
குறித்த சந்தேக நபர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான இளைஞன் தொடர்பில் வெளியானது விபரம் (காணொலி)
இரண்டாம் இணைப்பு
கடந்த 13ஆம் திகதி இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்து நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்ட 'டானிஸ் அலி' என்ற செயற்பாட்டாளரே கைது செய்யப்பட்டவராவார்.
தொலைக்காட்சி நிறுவன கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம் - விமானத்திலிருந்து பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன்
பலவந்தமாக இறக்கப்பட்ட இளைஞன்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நாட்டிற்கு புறப்படத் தயாராக இருந்த சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானத்திலிருந்து இளைஞர் ஒருவர் குடிவரவு அதிகாரிகளால் பலவந்தமாக இறக்கப்பட்டமை விமானத்தில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞர், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிள் அனைத்து சோதனைகளையும் முடித்த பின்னர் டுபாய் செல்வதற்காக விமானத்தில் ஏறியுள்ளார்.இதன்போது திடீரென விமானத்தில் ஏறிய குடிவரவு அதிகாரிகள் அந்த இளைஞருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அவர் வெளிநாடு செல்ல முடியாதெனவும் தெரிவித்து அவரை பலவந்தமாக விமானத்திலிருந்து இறக்கிச் சென்றுள்ளனர்.
பயணத்தடைக்கான ஆவணம்
இதன்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இளைருக்கு பயணத்தடை விதித்து அவரை கைது செய்வதென்றால் அதற்குரிய ஆவணத்தை காட்டுமாறு கேட்டபோதிலும் அதிகாரிகள் அதனை காட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரென தெரிவிக்கப்படுகிறது.