ரஷ்யாவுக்கு பேரதிர்ச்சி - புடினுக்கு நெருக்கமான தளபதி உக்ரைனில் மாயம்
ரஷ்ய முக்கிய தளபதி மாயம்
உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்யாவிற்கு தற்போது அமெரிக்கா தெரிவித்துள்ள தகவல் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ரஷ்யாவின் முக்கிய தளபதிகளில் ஒருவர் உக்ரைனில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மாயமாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியாவில் அரச தலைவர் அசாத் தலைமையிலான படைகள் தங்கள் மக்கள் மீதே கொடூர தாக்குதலை முன்னெடுக்க காரணமான ரஷ்ய தளபதிகளில் ஒருவர் அலெக்சாண்டர் டுவோர்னிகோவ். இவரை உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் முக்கிய பொறுப்புடன் கீவ்வுக்கு அனுப்பி வைத்தார் விளாடிமிர் புடின்.
கீவ் நகரை கைப்பற்ற முடியாமல் ரஷ்ய துருப்புகள் திணறிவர, அவர்களுக்கு ஊக்கமளித்து டான்பாஸ் நகரை கைப்பற்ற அனுப்பி வைத்தவர் அலெக்சாண்டர் டுவோர்னிகோவ். இந்த முடிவானது உண்மையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தோல்வியடைந்ததை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டுவதாக நிபுணர்கள் தரப்பு குறிப்பிட்டிருந்தது.
உக்ரைனுக்கும் கடும் பின்னடைவு
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக அலெக்சாண்டர் டுவோர்னிகோவ் மாயமாகியுள்ளதாக அல்லது அவர் உக்ரைனில் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க தரப்பு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ரஷ்ய துருப்புகள் கீவ் நகரை கைப்பற்றும் நோக்கில் செய்த தவறுகளையே, தற்போது டான்பாஸ் நகரை கைப்பற்றும் வேளையிலும் செய்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் சில பிராந்தியங்களை டான்பாஸில் ரஷ்ய துருப்புகள் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மட்டுமன்றி, உக்ரைன் தரப்பிலும் கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருவதாகவும், நாளுக்கும் 100 வீரர்கள் வரையில் உக்ரைன் தரப்பு பறிகொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
