ஜோசப் பரராசசிங்கத்தின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு (படங்கள்)
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ், கட்சியின் மகளீர் அணி தலைவி வாசுகி சுதாகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் பிரத்தியேக இடம் ஒன்றில் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செய்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.







