இராணுவம் - விடுதலைப் புலிகளுக்கு ஓரிடத்தில் நினைவுத்தூபி : நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப புதிய யோசனை
சிறிலங்காவிற்கென ஒரு நினைவுத்தூபியை அமைத்து அதன் ஊடாக யுத்தத்தில் உயிரிழந்த இராணுவத்தினரை மாத்திரமன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களையும் நினைவு கூர முடியுமென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் குழு உறுப்பினருமான சுனில் ஹந்துநெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் நம்பிக்கையை முதலில் வெல்லவேண்டும் எனவும், எனினும் தற்போதைய கோட்டாபய - மஹிந்த அரசாங்கத்திற்கு அதனைச் செய்ய முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின்போது, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதலிளிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் இது குறித்துப்பேசிய அவர்,
''வடக்கு மக்கள், கிழக்கு மக்கள் என வேறுபாடு எம்மிடம் கிடையாது, அப்படியான வேறுபாடு தவறானது. அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கு அமைய அவர்கள் மாறுபடலாம். அவர்கள் சிறுபான்மையினர் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களை அப்படி அழைக்கமாட்டோம். எங்களிடம் அந்த வார்த்தைக்கே இடமில்லை.
சிறுமான்மையினர் என அந்த மக்களை அழைப்பார்கள் எனின் பெரும்பான்மையினராக இருக்கவேண்டும். ஆகவே அங்குதான் முதலில் வேறுபாடு உருவாகின்றது. ஆகவே அப்படியொன்றும் இல்லை. அவர்கள் மக்கள். அவர்கள் அனைவரும் இலங்கையர்கள்.
அரசியலமைப்பில் ஒரு பிழை உள்ளது. சிங்கள மொழி அரச கரும மொழியாகும் எனவும் தமிழ் மொழியும் அரச கரும மொழி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியல்ல இரண்டுமே அரச மொழி ஆகும்.
1978 இலிருந்து எமது கொள்கைகப் பிரகடனத்தில் நாம் சிங்களம், தமிழ் அரச மொழிகளாகும் என்றுதான் குறிப்பிடுகின்றோம். அரசியலமைப்பில் காணப்படும் தமிழ் மொழியும் அரச மொழியாகும் என்பதை மாற்ற வேண்டும்.
யுத்தம் இருந்தபோது நாட்டில் ஒரு நிலை காணப்பட்டது. யுத்தம் முடிவடைந்து 2009இற்கு பின்னர் ஒரு நிலை காணப்பட்டது. அப்போது நாம் மக்கள் விடுதலை முன்னணியாக தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஆலோசனை வழங்கினோம்.
ஒவ்வொரு இடத்திலும் நினைவு தூபிகளை அமைக்க தேவையில்லை. நாட்டில் ஒரு நினைவுத் தூபியை தான் அமைக்க வேண்டும்.
அதில் இராணுவத்தில் இறந்தவர்களையும் நினைவு கூரலாம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து இறந்தவர்களையும் நினைவு கூரலாம் - யுத்தத்தை மறுக்கும் ஓர் இடம் அது அமையும்” எனக் கூறினார்.
