மாற்றப்படும் கடந்த அரசாங்க பொறிமுறைகள்: அநுர அரசின் அதிரடி தீர்மானம்
கடந்த அரசாங்கத்தின் போது தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் நாடாளுமன்றத்தின் பல குழுக்களை இரத்து செய்ய அல்லது மாற்றுவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறான குழுக்களை நியமிப்பதால் பெருமளவு பணம் விரயமாவதை அரசாங்கம் உணர்ந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த நாடாளுமன்ற குழுக்களின் நியமனங்கள் தொடர்பான விடயங்களை மறுஆய்வு செய்து அதற்கான முன்மொழிவுகளை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
குழுக்களில் மாற்றம்
இதன்படி, துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் நாடாளுமன்ற மன்றங்கள் அமைக்கும் முறைகள் மிக விரைவில் மாற்றப்படும் என கூறப்படுகிறது.
மேலும், ஒரே மாதிரியான துறைகளுக்கு பல துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், அவ்வாறான துறைகளை ஒரு குழுவின் கீழ் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் தொடர்பில் அண்மைக்காலமாக பல துறைசார் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை ஒரே குழுவின் கீழ் கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய பொறிமுறை
கடந்த காலங்களில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு பின்னர், குறிப்பிட்ட சிலரை மகிழ்விப்பதற்காக சில பிரிவு கண்காணிப்புக் குழுக்கள் அவசர அவசரமாக இவ்வாறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமன்ற குழுக்களின் பரிந்துரைகளை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் அளிக்கும் பொறிமுறையொன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |