யானை தாக்கி உயிரிழப்பவர்களுக்கு அதிகரிக்கவுள்ள இழப்பீடு
காட்டு யானைகள் உட்பட பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் தாக்குதலின் காரணமாக உயிரிழக்கும் அல்லது முழுமையாக ஊனமுறும் ஒருவருக்கு செலுத்தப்படுகின்ற இழப்பீட்டுத் தொகையை 1 மில்லியனிலிருந்து 2 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யானையால் ஏற்படும் சேதத்திற்கான இழப்பீடு
அத்துடன் யானை - மனித மோதலின் காரணமாக வீடொன்றிற்கு ஏற்படும் சேதம் சார்பில் செலுத்தப்படுகின்ற இழப்பீட்டுத் தொகையை 2 இலட்சத்திலிருந்து 1 மில்லியன் ரூபாய் வரை அதிகரிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பகுதியளவு ஊனமுறும் ஒருவருக்கு செலுத்தப்படுகின்ற இழப்பீட்டுத் தொகையை ரூ. 150,000 இலிருந்து ரூபா 5 இலட்சம் வரையும், வீடு அல்லாத ஏனைய சொத்துக்களுக்கு செலுத்தப்படுகின்ற இழப்பீட்டுத் தொகையை ரூபா 2 இலட்சத்திலிருந்து ரூபா 5 இலட்சம் வரையும் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கையின் உயிர்வாழ் உரிமையொன்றாக விளங்கும் காட்டு யானைகள் வளத்தைப் பாதுகாப்பதற்கும், ஏற்படும் தொந்தரவுகளைத் தடுப்பதற்கும், இது சம்பந்தமான சட்டக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
யானைகளை பாதுகாக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
தாவர வனவிலங்கு பாதுகாப்பு கட்டளைச் சட்டம் திருத்தப்பட்டு, தற்போது காணப்படுகின்ற சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக, காட்டு யானையைக் கொல்வது, வேட்டையாடுவது, சுடுவது, காயப்படுத்துவது அல்லது பிடிப்பதற்கான ரூ. 150,000 முதல் ரூபா 5 இலட்சம் வரையிலான அபராதத் தொகையை ரூபா 5 இலட்சத்திலிருந்து ரூபா 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு முன்மொழியப்படுகிறது.

சட்டவிரோதமாக யானையை வைத்திருப்பதற்கான அபராதத்தை, தற்போதுள்ள ரூ. 150,000 இலிருந்து ரூ. 250,000 வரையான அபராதத் தொகையை ரூபா 5 இலட்சத்திலிருந்து ரூபா 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு 2005 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அபராதங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு முன்மொழியப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |