தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளியான அறிவிப்பு!
காணாமல் போன அடையாள அட்டைகள் தொடர்பான காவல்துறையின் அறிக்கைகளை பெறுவது தொடர்பில் காவல்துறை மா அதிபர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வமற்ற முறையில் காவல்துறை அறிக்கைகளை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் காவல் நிலையப் பரிசோதகர் நாயகத்திற்கு விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த அறிவிப்பில் , காணாமல் போன அடையாள அட்டைகள் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க காவல் நிலையங்களுக்கு வரும் மக்களுக்கு தவறான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவது தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளது.
கிராம அலுவலரின் வசிப்பிட சான்றிதழ்
அடையாள அட்டை காணாமல் போனவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்திலிருந்து காவல்துறையின் அறிக்கையைப் பெற வேண்டும்.
மேலும், அடையாள அட்டைகள் காணாமல் போன நாளிலிருந்து 14 நாட்களுக்குப் பிறகு அடையாள அட்டைகள் கிடைக்காவிட்டால், அவர்கள் முறைப்பாடு செய்ய வேண்டும்.
காவல்துறை அறிக்கையை வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட நபருக்கு அவர் வசிக்கும் பிரதேசத்தின் கிராம அலுவலரின் வசிப்பிட சான்றிதழ் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போன அடையாள அட்டைகள்
அதற்கமைய, இனிமேல் யாரேனும் ஒருவர் காணாமல் போன அடையாள அட்டைகள் குறித்து முறைப்பாடு செய்ய வந்தால், அந்த அடையாள அட்டை காணாமல் போயுள்ளதென காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துக் கொள்ளுமாறு காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், முறைப்பாடு பதிவு செய்வதற்கு நிபந்தனைகளை முன்வைக்கக் கூடாது என காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவினால் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1968 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க நபர்கள் பதிவுச் சட்டத்தின் பிரிவு 16 -1 க்கமைய, உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

